KAMARAJAR

குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் அல்லது காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழக ஆட்சிப் பொறுப்பு
1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராஜர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராஜ்ஜியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராஜாஜியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராஜாஜிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராஜாஜி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம்; நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சிசட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராஜர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று முதல்வரானதன் பின்னணி.

வித்தியாசமான அமைச்சரவை
காமராஜர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்)அமைச்சர்கள் இருந்தனர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு திமுக ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. திமுகவின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; திமுக வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று எம் எல் ஏ ஆனவர்கள் இந்த இருவரும்.)
அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேஸ்வரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

காமராஜ் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும்


பெருந்தொழிற்சாலைகளும்:


பாரத கனரக மின் நிறுவனம் (BHEL)
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை.
Related Posts Plugin for WordPress, Blogger...